காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா சில மாதங்களுக்கு முன்பு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னாய் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகிய இருவருக்கும் பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதமும் கூட லாரன்ஸ் பிஷ்னாயிடம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் சல்மான் கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாகக் கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானைக் கொன்றதற்காக சல்மான்கானை கொன்று விடுவோம் எனக் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த மிரட்டல் கடிதம் வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து பாதுகாப்பு வேண்டும் என விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை சல்மானுக்கு மும்பை காவல்துறையின் வழக்கமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சல்மான்கானுக்கு தற்போது மும்பை காவல் துறையினரால் Y+ பிரிவு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பில் இருந்த சல்மான்கானுக்கு தற்போதைய நிலவரத்தைப் பற்றி சோதித்த அதிகாரிகள், இப்போதும் அச்சுறுத்தல் அதிகம் நிலவி வருவதால் அவருக்கு இரண்டு மடங்கு கூடுதல் பாதுகாப்பாக Y+ பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Y+ பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 2 முதல் 4 வீரர்கள் உள்ளிட்ட 11 காவல்துறையினர் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் நடிகர்கள் அக்சய் குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கு X பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதுகாப்புப் பணிகளின் செலவுகளை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக்சய் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியம் குறித்துப் பேசியதாகவும் அனுபம் கெர் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியானது தொடர்பாகவும் இருவருக்கும் அச்சுறுத்தல்கள் வந்ததாகப் பேசப்படுகிறது.