உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3500ஐ கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சல்மான் கானும், அவரது இளைய சகோதரரின் மகன் நிர்வானும் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் பேசிய சல்மான், “நாங்கள் இங்கு சில நாட்கள் இருக்கலாம் என்று வந்தோம். ஆனால் இப்போது இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோம், பயத்தில் இருக்கிறோம். நான் எனது அப்பாவைப் பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. நாங்கள் இங்கிருக்க என் அப்பா வீட்டில் தனியாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
Be Home n Be Safe @NirvanKhan15 #IndiaFightsCorona pic.twitter.com/3erbteJtz6
— Salman Khan (@BeingSalmanKhan) April 5, 2020
அதனையடுத்து நிர்வானிடம், உன் அப்பாவை நீ சந்தித்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று சல்மான் கேட்டார். அதற்கு அவர், மூன்று வாரங்கள் இருக்கும் என்று பதிலளித்தார்.
மேலும் நிர்வானிடம் பேசிய சல்மான், "உனக்கு இந்த திரைப்பட வசனம் நினைவிருக்கிறதா. 'பயந்த ஒருவன்தான் இறந்து போனான்'. அது இந்த தருணத்திற்குப் பொருந்தாது. நாங்கள் பயத்தில் இருக்கிறோம். அதைத் தைரியமாக ஒப்புக்கொள்கிறோம். நீங்கள் இந்த தருணத்தில் துணிச்சலைக் காட்டாதீர்கள். அச்சப்பட்டவன்தான் தானும் தப்பித்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றியுள்ளான், என்பதுதான் கதையின் நீதி, நாங்கள் அனைவரும் அச்சப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.