நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் எழில், முதன்முறையாக தன்னுடைய பாணியிலிருந்து விலகி முழுக்க முழுக்க மர்மம் நிறைந்த திரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். 'யுத்த சத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய யுத்த சத்தம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் "யுத்த சத்தம்" படத்தில் நாயகியாக ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' பட புகழ் நடிகை சாய் பிரியா தேவா நடிக்கிறார். இதுகுறித்து நடிகை சாய் பிரியா பேசுகையில்...
"எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை), உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு. நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன். இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன். முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தைக் கண்டு, என்னைப் புரிந்துகொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர். நான் நடிப்பை முறையாகக் கற்றுக்கொண்டு மாடலிங்க் செய்து என்னை படிப்படியாகத் தயார் செய்து கொண்டேன்.
இயக்குநர் பி வாசு சாரின் 'சிவலிங்கா' திரைப்படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததுதான் எனது முதல் திரைப்பட அறிமுகம். அதன்பிறகு நான் ஒரு மலையாள படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நடித்தேன். இதையடுத்து இயக்குநர் எழில் சாரின் "யுத்த சத்தம்" படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது, நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். என்னால் முடிந்தளவு மிகச் சிறப்பாக ஆடிஷனில் நடித்துக் காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது. இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் எழில் சார் எந்த வகை திரைப்படங்களை உருவாக்கினாலும், அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். அதிலும் மிகச்சிறந்த நடிகர்களான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருடனும் நடிப்பது பெருமை" என்றார்.