நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் “விஜய்யின் சினிமா ஆசையை ஆரம்பத்தில் நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டினீர்கள். அத்தோடு விஜய் நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த விமர்சனம் என்ன” என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ ஓடவில்லை. ஆனால் அந்த படப்பிடிப்பின் நாட்களில் விஜய்க்குள் ஒரு நடிகன் ஒரு கலைஞன் இருப்பதை நான் உணர்ந்தேன். அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்தேன்.
நாளைய தீர்ப்பு ஓடவில்லை அதனால் விமர்சனம் எதுவும் வரல., அடுத்து செந்தூர பாண்டிக்கு வரவில்லை. அது விஜயகாந்த்திற்காக ஓடியது என்று விட்டுட்டாங்க போல. அடுத்தபடியாக ரசிகன், முழுக்க முழுக்க ரொமாண்டிக் கமர்சியல் படம் 150 நாட்கள் ஓடியது. அதற்கு தான் விமர்சனம் வந்தது.
நான் விஜய்யை சினிமாவுக்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை. என்னோட பொண்ணு மூன்று வயதில் கேன்சர் நோயால் இறந்து போயிடுச்சு. அது என்னை ஆறு மாத காலம் இயங்கவிடாமல் செய்தது. அதனால் எனக்கு விஜய்யை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதுவும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டராக்கி இலவச மருத்துவமனை ஒன்றை உருவாக்கி முழுக்க முழுக்க கேன்சரை குணப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனியொரு குழந்தை கேன்சரால் இறந்துவிடக்கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.
விஜய்க்கு நடிப்பின் மீதே ஆர்வம் இருந்ததால் அவரது அப்பாவின் கனவு லட்சியமான கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கனவு நிறைவேறாமல் போனது.