சீகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘எக்ஸ்ட்ரீம்’. இப்படத்தில் ரட்சிதா, அபி நட்சத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “எக்ஸ்டிரீம் இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான், கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார்.
அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். இசை அருமை, ஒளிப்பதிவு நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள். ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம். சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.