Skip to main content

"படத்தை பார்த்துவிட்டு இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை" - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சு 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

RK Suresh

 

பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஜோசப், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் விசித்திரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார்.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

 

விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், "சீமானுடன் அமீரா படம் பண்ணும்போதுதான் ஜோசப் படத்தை நான் பார்த்தேன். படத்தை பார்த்துவிட்டு சீமானிடம் சென்று அண்ணன் ஜோசப் என்று ஒரு படம் பார்த்தேன். இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை. அந்தப் படத்தின் உரிமையை வாங்கி நான் நடிக்க வேண்டும் என்றேன். அமீரா படத்தின் படப்பிடிப்பை முடித்தபிறகு சென்னை வந்து இயக்குநர் பாலாவை சென்று சந்தித்து இது பற்றி கூறினேன். அவர் நான் படம் பார்த்துவிட்டு கூறுகிறேன் என்றார். படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் பண்ண வேண்டுமென்றால் நீ சில விஷயங்கள் செய்தாக வேண்டும் என்றார்.

 

அதன் பிறகு, இந்தப் படத்திற்காக 29 கிலோ உடல் எடையைக் கூட்டியிருந்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழி சரியாக வரவேண்டும் என்பதற்காக இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்துக்கொண்டு மெதுவாக நடப்பேன். ஒருநாளைக்கு பத்து முறையாவது இயக்குநர் என்னை இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வைத்துவிடுவார். அதை நான் கஷ்டமாக பார்க்கவில்லை. ஏனென்றால் சினிமாவில் சூர்யா, அஜித், விக்ரம், விஜய் படாத கஷ்டமே இல்லை. இந்த உழைப்பை நாம் கொடுத்தால்தான் சினிமா நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன்" எனக் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்