ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அபோது விழாவில் நடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில்...
"மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால் வைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு அல்லவா?. இந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே நான் என்னுடைய சொந்த பணம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள்.
நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும், உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று மாநிலத்தவன் அல்ல. சினிமாவை நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம் கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு தான் அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும் நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில் முதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.