கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்த்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் என நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் கமல், விக்ரம், சரத்குமார், ராதா ரவி, சிவகுமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் பலரும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன்களான விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “சாதாரண திரைப்பட கல்லூரி மாணவனாக இருந்த என்னை உலகம் முழுக்க அறியச் செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்திற்கு தலைவரான பிறகு சமுதாயத்தில் நடிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்படுத்தி தந்தவர். ஒரு அமைப்பு என்பது சமூகத்திற்கு பயன்படாவிட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் தான் விஜயகாந்த் தலைவராக மாறிய பிறகு அவர் தலைமையில் நடைபெற்ற நெய்வேலி போராட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அப்போதுதான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்பது இந்தியாவுக்கே தெரிந்தது. புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் கூட ஒரு விண்ணப்பத்தை வைக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் நடிகர் சங்கம் இன்று எவ்வளவு மரியாதையாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது புகழின் உச்சத்தை தொட்டது என்றால் அது கேப்டனால் மட்டும்தான். அவருடைய பெயரை வைக்கலாமா வேண்டாமா என்று விவாதம் செய்வதையே கூட, அவருக்கு செய்யும் அவமானமாகத்தான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் இல்லாமல் அவர் பெயரை வைக்க வேண்டும். முதல்வர் இரண்டு முறை வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதால் விஜயகாந்த்திற்கு பெருமை இல்லை. தமிழக முதல்வருக்கு தான் பெருமை. பிரதமர் கூட தான் பேசும் மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் பெயரை சொல்லும் அளவிற்கு ஒரு தாக்கத்தை அவரது மரணம் ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல நடிகர் சங்க வளாகத்திற்கு அவரது பெயரை வைப்பதால் விஜயகாந்த்திற்கு புதிதாக புகழ் எதுவும் கிடைக்கப்போவதில்லை. நடிகர் சங்க வளாகத்திற்கு தான் பெயர் கிடைக்கப் போகிறது. நடிகர் சங்க கடனை எப்படி அடைத்தீர்கள் என அவரிடம் நான் கேட்டபோது, அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா எல்லாம் சரத்குமாரிடம் கேட்டுக்கொள். அவர் தான் எல்லாத்தையும் செட்டில் செய்தார் என்று தனக்கு கிடைத்த புகழை கூட விரும்பாதவர் விஜயகாந்த். மகாத்மா காந்தியைக் கூட பொது இடத்தில் தான் புதைத்தார்கள். ஆனால் தன்னுடைய சொந்த இடத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் அளவிற்கு பொதுச்சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவர் விஜயகாந்த்.
அவரைப் பற்றி ஒரு புத்தகம் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய பிறந்த நாளில் அவர் வாழும் காலத்திலேயே அதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். துரதிஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அவர் நினைவுடன் இருந்தபோது, கடைசியாக நான், இயக்குநர் விக்ரமன், ஆர்வி உதயகுமார், பேரரசு உள்ளிட்ட ஐந்து பேர் அவரை சந்தித்தோம். அப்போது புலன் விசாரணையில் எப்படி என் கைகளை இறுக்கி பிடித்தாரோ, அதேபோன்று பிடித்துக்கொண்டார். புலன் விசாரணை படத்தின் படப்பிடிப்பை ஒரு பொருட்காட்சியில் நடத்திக் கொண்டிருந்தபோது அதிகப்படியான கூட்டம் கூடி தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, போலீசார் என்னை தவறுதலாக அடித்து விடக்கூடாது என்று என்னுடைய கரங்களை இறுக பற்றிக்கொண்டு அடை காத்தவர் விஜயகாந்த். அதேபோல அவரை கடைசியாக சந்தித்தபோது, ஆர்வி உதயகுமார் அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே என்று பாடியபோது எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிய, கேப்டனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அதையும் தாண்டி எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழ வேண்டாம் என எங்கள் கண்ணீரை துடைக்க முற்பட்டார்.
1988 டிசம்பர் 28ஆம் தேதி தான் புலன் விசாரணை படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அவர் மறைந்ததும் அதே போன்று டிசம்பர் 28ஆம் தேதி தான். ஏதோ ஒரு வகையில் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவரை கேப்டன் விஜயகாந்த் என எல்லோரும் சொல்லும்போது அதில் பத்து சதவீதம் பங்கு எனக்கும் இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறேன். கேப்டனின் மறைவுக்கு யாரும் வரவில்லை என்றால் மக்கள் அவர்களை குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு மக்களின் மனநிலை இருந்தது. மக்களுக்கு பயந்தாவது நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்கிற கட்டாயத்தை பொதுமக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அதுதான் கேப்டன் விஜயகாந்தின் பலம். வாழும் வரைக்கும் அவரது பலம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் மறைந்த இன்றும் அவரது நினைவிடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இதை விட ஒரு நன்றிக்கடனை தமிழக மக்கள் வேறு யாருக்கும் செலுத்தி இருக்க மாட்டார்கள்” என்றார்.