பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 பட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அப்போது கடந்த 16ஆம் தேதி, சென்னையில் சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில், நடந்த படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திரையுலகிலனர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதனால் சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத் திரை, பெரியதிரை) நடைபெறவில்லை.
இந்த நிலையில் சிறப்பு கூட்டம் நடந்து முடிந்த பிறகு, ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செல்வமணி பேசுகையில், “தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்தியன் 2-வில் தொடங்கி சர்தார் 2 வரை ஏறக்குறைய 25 பேர், அகால மரணமடைந்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல், சில நேரங்களில் அலட்சியத்தால், தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மற்றும் கவனக் குறைவால் ஏற்படுகிறது. பல முறை நாங்கள் பாதுகாப்போட படப்பிடிப்பு நடத்த அறிவுறுத்தியுள்ளோம். விபத்து நடக்கும் போது மட்டும் பேசுகிறார்கள், அதன் பிறகு அதை செயல்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் முதல் முறையாக ஃபெப்சியோடைய வரலாற்றில், எல்லா சங்கங்களுடைய உறுப்பினர்களை அழைத்து பாதுகாப்பு பற்றிய அனைத்து விஷயங்களையும் கலந்து ஆலோசித்துள்ளோம்.
விபத்து நடப்பது உறுப்பினருடைய கவனக்குறைவு தான். இதில் தயாரிப்பாளர்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. தக்க வசதிகளை செய்துத் தரவேண்டியது தான் தயாரிப்பாளரின் பொறுப்பு. அதன் பிறகு நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கு எதோ ஒரு உறுப்பினர் தான் காரணம். கடைசியாக நடந்த சர்தார் 2 பட விபத்தில் கூட கயிறு வலுவாக இல்லாமல் அறுந்து நடந்துள்ளது. அதற்கு தயாரிப்பாளர் பொறுப்பல்ல. படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் அதை சரி பார்த்திருக்க வேண்டும். இது குறித்து யார்மேலையும் குறை சொல்ல விருப்பப்படவில்லை. எங்களுடைய உறுப்பினர்களுக்கு 70 சதவீதம் பொறுப்பு இருக்கிறது. அதனால் தயாரிப்பாளர், உறுப்பினர்கள் என அனைவரையும் கூட்டி பேசியிருக்கிறோம்.
நடிகர்களும் இனிமேல் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும். திடீரென்று டேட் கொடுப்பதால், 40 நாள் போகவேண்டிய செட் ஒர்க்கை 10 நாளில் போடக் கூடைய நிலை வருகிறது. அப்போது அவசரஅவசரமாக வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு பாதுகாப்பை அலட்சியமாக பார்க்கின்றனர். அதனால் நடிகர்களும் முன் கூட்டியே தயாரிப்பாளருக்கு டேட் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கேற்ப சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை தொடங்க வேண்டும். இங்கு வசதி இல்லை என காரணம் காட்டி, ஹைதராபாத் சென்றுவிடாதீர்கள். அரசு தக்க வசதிகளை கட்டி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அது விரைவில் நடக்கும் என நம்புகிறோம்.
இக்கூட்டதில் சில தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம். அதில் முக்கியமானதாக, எங்கள் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடும், விபத்து காப்பீடும் தயாரிப்பாளர் ஏற்படுத்தி தரணும். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து வசதிகளும் அடங்கிய ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும். அல்லது 15 நிமிடத்திற்க்குள் வரவேண்டிய ஆம்புலன்ஸ் வசதியை படக்குழு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அனைத்து கலைஞர்களுக்கும் பாதுக்காப்பு கவசங்களை வைத்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 15 முதல் இதை கடைபிடிக்க வேண்டும் என படக்குழுவினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அப்படி தவறும் பட்சத்தில் எங்கள் உறுப்பினர்கள் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள மாட்டார்கள்” என்றார்.