Skip to main content

“இந்த விஷயத்தில் திராவிட கழகங்களைப் பின்தொடர வேண்டும்” - ஆர்.கே. செல்வமணி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
rk selvamani about censor issue

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளைத் தான் வெளியிடக் கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இந்த சென்சார் அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும்போது தாக்குதல் துவங்கி விடுகிறது. 

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும் ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிட கழகங்களைத் தான் பின்தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிட கழகங்களைத் தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்தது. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்