ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில் பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்தத் தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் விஷ்ணு விஜய், ஆர்.ஜே. விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே. பார்வதி, ஷியாமா, லாவண்யா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். சின்னத்திரை நடிகையான லாவண்யா பேசும்போது, “வேற மாறி ஆபிஸ் தொடரில் என் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா. நீங்கள் லாவண்யாவைப் பார்த்தால் ரம்யாவைப் பார்க்க வேண்டாம். ரம்யாவைப் பார்த்தால் லாவண்யாவைப் பார்க்க வேண்டாம். எனக்கே என்ன இது நம் கேரக்டரையே நடிக்கச் சொல்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. படப்பிடிப்பு தளம் மிகவும் ஜாலியாக சந்தோசமாக இருக்கும். என் ஸ்டோரிஸ் பார்ப்பவர்களுக்கு அது ஏற்கனவே தெரிந்திருக்கும்” என்று பேசினார்.
ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும்போது, "எங்கள் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி. வந்தவுடனே நான் பேசிவிடுகிறேன் என்று கூறினேன். இல்லை கடைசியாகப் பேசு என்று பாதி பேர் கிளம்பிச் சென்று இருக்கைகள் காலியான பின்னர் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருக்கு நன்றி. நண்பரும் தயாரிப்பாளருமான சிவகாந்த் அவர்களுக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள்.” என்று பேசினார்.