புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று ட்விட்டரில் தமிழ்நாடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேகும் ட்ரெண்டானது. பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தன்னுடைய எல்.கே.ஜி படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைத்திருந்த காட்சியை பதிவு செய்துள்ளார். அதனுடன், தமிழ்நாடு ஹிந்திக்கு எதிராக இல்லை, ஆனால் ஹிந்தி திணிப்புக்கு எதிராகதான் உள்ளது. பல மொழிகளை தெரிந்திருப்பது பலம்தான். ஆனால், அது நம்முடைய தேர்வாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பால இருக்க கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.