பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில், "என்னால் நம்ப முடியவில்லை. சிண்டு ஜி எப்போதும் சிரிப்புடன் தயாராக இருப்பவர். எங்கள் இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் உண்டு. என்னுடைய நண்பனை மிஸ் செய்வேன். அவருடைய குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.