இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். இதனிடையே ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ராணி எலிசபெத் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவு கொள்வோம்...
இதுவரை 3 முறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் ராணி எலிசபெத். முதல் முறையாக 1961-ஆம் ஆண்டு, மறைந்த இளவரசர் மற்றும் அவரது கணவர் பிலிப்புடன் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவில் இருக்கும் தாஜ்மஹாலையும் பார்வையிட்டார். பின்பு டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து கடந்த 1983-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வருகை தந்தார் ராணி எலிசபெத். அப்போது டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சந்தித்தார். பின்பு டெல்லியில் அன்னை தெரசாவையும் சந்தித்தார்.
பின்பு 1997-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ராணி எலிசபெத் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்தார். அப்போது சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நிறுவனத்தில் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர், மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 நிமிடங்கள் ராணி எலிசபெத் பங்கேற்றார்.
ராணி எலிசபெத் இந்தியாவை பற்றி ஒரு இடத்தில், "இந்திய மக்களின் அரவணைப்பு, விருந்தோம்பல் இந்தியாவின் செழுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளன," என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.