விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்திருந்தார். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே இன்கெம் காவாலே என்னும் பாடல் வைரலானது. அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கும் ரசிகர்கள் தென்னிந்தியா முழுவதும் உருவானார்கள். கீதா கோவிந்தம் படம் தமிழ் மொழியில் டப் செய்து வெளியாகவில்லை என்றாலும் தெலுங்கிலேயே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதன்பின் இவ்விருவரும் சேர்ந்து டியர் காம்ரேட் என்னும் படத்தில் நடித்தனர். இது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து வெளியிடப்பட்டது. இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து சுல்தான் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுடன் இவர் ஜோடி சேர்ந்த சரிலேரு நீக்கெவரு கடந்த 11ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்திற்கான புரோமோஷன்களில் ‘நீங்கள் அதிக பணம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டீர்களாமே’ என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கெல்லாம் பதிலளித்த ராஷ்மிகா, ‘சினிமாவிற்கு நான் கத்துக்குட்டி, அப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நான் இன்னும் நீடித்து உழைக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ராஷ்மிகாவின் மீது சந்தேகமடைந்த வருமான வரித்துறை கர்நாடகா குடகு மாவட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் திடீர் சோதனை நடத்தியது. கடந்த 16ஆம் தேதி காலை 7:30 மணிக்கு மூன்று வாடகை காரை எடுத்துக்கொண்டு, 10 பேர் அடங்கிய ஐடி குழு ராஷ்மிகா வீட்டிற்கு சென்று 10 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் வீட்டில் ராஷ்மிகா இல்லாததால் அவருடைய தந்தையிடம் கணக்கு ஆவணங்கள் குறித்த விசாரணைகளை அடுத்தநாள் வரையில் நடத்தியுள்ளனர். ராஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் பெட்ரோல் பங்குகளிலும் இந்த சோதனையாந்து நடபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா தனது சொந்த ஊரில் சர்வதேச பள்ளி ஒன்றையும், பெட்ரோல் பங்கையும் தொடங்க விண்ணப்பித்திருக்கிறார் என்றும் இதனால்தான் சந்தேகமடைந்த வருமான வரி சோதனையினர் ராஷ்மிகா வீட்டில் திடீரென சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வருமான வரிச்சோதனை நடைபெறும்போது ராஷ்மிகா ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. வருகிற திங்கள் கிழமை பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்திற்கு ராஷ்மிகா தனது தந்தையுடன் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராஷ்மிகா வீட்டிலிருந்து கணக்கு காட்டப்படாத 25லட்சம் பணத்தை வருமான வரிச் சோதனையில் அதிகாரிகள் மீட்டிருப்பதாக பரவும் தகவலை ராஷ்மிகா சட்டப்படி அணுகயிருப்பதாக கூறியுள்ளார்.