கடந்த சனிக்கிழமை அன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் பாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து மகாத்மாவின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காந்திக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த விழாவில் இயக்குமர் ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான், அமிர்கான் உட்பட எட்டு முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் இவர்களுடன் இணைந்து இந்த விழாவை சிறப்பித்தனர்.
இதனையடுத்து இந்த மாதிரியான விழாக்களில் தென்னிந்திய நட்சத்திரங்கள் தவிற்கப்படுவதாக தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி உப்சனா வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் , “அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக அடைந்ததற்காக மிகவும் பெருமை கொள்கிறோம். ஆனால் பெரும் ஆளுமைகள் மற்றும் கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு, தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம். நான் என்னுடைய உணர்வுகளை வலியோடு பதிவு செய்கிறேன், இந்த கருத்தை ஆக்கபூர்வமான முறையில் கூறுகிறேன். அவ்வாறே எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.