Skip to main content

“பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்” - டான் படத்திற்கு ராமதாஸ் ரிவ்யூ!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

ramadoss Praise sivakarthikeyan don movie

 

'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாகப் பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடினர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில்  அழைத்துப் பாராட்டியிருந்தார்.

 

இந்நிலையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்தேன், ‘பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்’ என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

இப்படத்தில் மோகன் லால் மற்றும் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வல் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மலையாள நடிகர் பிஜூ மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியகியுள்ளது. பிஜூ மேனன், தமிழில் மஜா, தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010ஆம் ஆண்டு கிஷோர் நடிப்பில் வெளியான போர்க்களம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்படம் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.