லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியான நிலையில், நாயகன் ராம் பொத்தினேனியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ’தி வாரியர்’ படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக 15 ஆண்டுகள் காத்திருந்தேன். அதற்காக தமிழ், தெலுங்கு இரண்டிலும் வரவேற்பு பெறக்கூடிய கதையை எதிர்பார்த்திருந்தேன். வாரியர் படம் மூலமாக அது நடந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த எதிர்பார்ப்பு லிங்குசாமி சாருக்கும் தெரியும். இதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறேன் என்று அவர் சொன்னார். அதனால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்வார் என்று எனக்குத் தெரியும். ஆனால், மொத்த சினிமா துறையையும் அழைத்து ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது மாதிரியான மேடையை இந்தியாவே பார்த்ததில்லை.
எல்லோருமே ரொம்பவும் பிஸியாக இருந்தனர். அவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ்களை ஒரே நாளில் ஒரே மேடையில் அமரவைத்தது என்பது சாதாரணமான விஷயமில்லை. லிங்குசாமி சார் எனக்காக செய்தார். வந்தவர்கள் லிங்குசாமி சாருக்காக வந்தார்கள். வந்தவர்கள் என்னைப் பற்றியும் பேசியது ரொம்பவும் மகிழ்ச்சி.
லிங்குசாமி படம் என்றாலே ஆக்ஷன்தான் அனைவருக்கும் நியாபகம் வரும். ரொம்ப நாட்களாக போலீஸ் கதாபாத்திரம் பண்ணவில்லை என்பதால் போலீஸ் கதையாக கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லோருமே ஒரே மாதிரி கதை சொன்னார்கள். நிறைய கதைகள் கேட்ட பிறகு போலீஸ் கதையே வேண்டாம் என முடிவுக்கு வந்து வேறு கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் லிங்குசாமி சார் வந்தார். அவர் போலீஸ் கதை என்றதும், அந்தக் கதையே வேண்டாமென நினைத்தோமே என்று நினைத்துக்கொண்டே கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அவர் சொன்ன கதை ரொம்பவும் பிடித்திருந்தது. உடனே ஓகே சொன்னேன்.
படத்தில் கீர்த்தி ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். இது டிஎஸ்பியுடன் எனக்கு ஏழாவது படம். அதனால் அவர் எப்படி பாட்டுக்கொடுப்பார் என்று தெரியும். படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்த டிஎஸ்பிக்கு நன்றி. நம்முடைய முதல் தமிழ்ப்படம் டப்பிங் படமாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். லிங்குசாமி சாரிடமும் அதைத் தெளிவாக சொல்லிவிட்டேன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் ஷூட் செய்தது சவாலாக இருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.