இந்திய திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் நிலவிய கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விழா நடைபெறாமலேயே இருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல். முருகன், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதினை வழங்கினார். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.