தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டன. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் சிலர் 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு, உயிருடன் உள்ள ஆட்டை வெட்டி, ரத்த அபிஷேகம் செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்களின் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிந்துவரும் நிலையில், இதனைக் கண்டித்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'அண்ணாத்த' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.