ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினியே தயாரித்தும் இருந்தார். மனிஷா கொய்ராலா, நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படம் 20 ஆண்டுகள் கழித்து தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் புதிதாக சில காட்சிகள் இணைக்கப்பட்டு மற்றும் பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு கலர் கிரேடிங் செய்யப்பட்ட பாபா படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'பாபா' படத்தின் ரீ ரிலீஸ் குறித்த தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அப்போஸ்டரில் இருக்கும் 'தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு' வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ரஜினி படம் எதுவும் வெளியாகாததால் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாள் வருகிற 12ஆம் தேதி (12.12.2022) என்பது நினைவுகூரத்தக்கது.