'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதே படப்பிடிப்பு துவங்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வரும் 15 அல்லது 22 ஆம் தேதியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என பதிலளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.