
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எஃப்(CISF) உருவாக்கப்பட்டுக் கடந்த 7ஆம் தேதியுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி ‘பாதுகாப்பான கடற்கரை - வளமான இந்தியா’ என்ற பெயரில் கடலோரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணியைத் தொடங்கினர். இந்த பேரணியில் வீரர்கள் மொத்தம் 6,553 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவுள்ளனர். கடந்த 20ஆம் தேதி மும்பையில் 3, 300 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்தனர். நாளை(25.03.2025) சென்னை வருகின்றனர். பின்பு மங்களூரு, கொச்சின் வழியே இந்த பேரணியின் கடைசி இடமான கன்னியாகுமரியை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி சென்றடையவுள்ளனர்.
இந்த நிலையில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பேரணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “நம்ம நாட்டுடைய பெயர், சந்தோஷம்... அதை கெடுக்க பயங்கரவாதிகள், கடல் வழியாக நாட்டுக்குள்ளே புகுந்து கோர சம்பவங்களை செய்வாங்க. அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த அந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேருடைய உயிரை வாங்கிவிட்டது. கடலோரம் பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகத்துக்குரிய மக்கள் யாராவது நடமாடினால் கிட்ட இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்ல வேண்டும்.
இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த 100 சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பேரணி செல்கின்றனர். அவர்களை உங்க ஏரியாவுக்கு வரும்போது வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் பயணித்து உற்சாக படுத்துங்கள்” என்றார்.