ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, த.செ.ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பட விழா மேடையிலும் குட்டி கதை சொல்லி ரசிகர்களை மகிழ்விக்கும் ரஜினி இந்த நிகழ்விலும் சொன்னார். அவர் பேசியதாவது, “சௌந்தர்யா, என்னிடம் ஞானவேல் ஒரு லைன் சொன்னதாக சொன்னார். அதற்கு நான் அவர் மெசேஜ் சொல்லுவார். அது நமக்கு செட் ஆகாது. மக்கள் கொண்டாடுகிற மாதிரி கமர்ஷியலா இருக்கணும்னு சொன்னேன். எனக்காக ஒரு கதை ரெடி பண்ணுமாறு ஞானவேலிடம் சொன்னேன். பத்து நாள் டைம் கேட்டார். ஆனால், ரெண்டே நாளில் ஃபோன் பன்னார். நான் கமர்ஷியலா பண்றேன். ஆனால், நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாமல் வேறொரு கண்ணோட்டத்தில் காட்டுறேன்னு சொன்னார். அப்போ அதுதான் வேணும். நெல்சன், லோகேஷ் மாதிரி வேணும்னா நான் அவங்களிடமே போயிருப்பேன்னு சொன்னேன்.
பின்பு ஆறிலிருந்து அறுபது வரை படம் மாதிரி ஒரு நடிகர் ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மை கதையைச் சொன்னேன். அங்க ஒரு ஊர்ல ஒரு டோபி இருந்தார். அந்த ஊர்ல இருக்கிற ஒரு குளத்தைக் கடக்க ஒரு கழுதையைத்தான் பயன்படுத்துவாங்க. ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போக அந்த அதிர்ச்சியில் டோபி எல்லாத்தையும் மறந்துவிடுகிறார். அப்ப எல்லாரும் சேர்ந்து அவருக்குக் காவி உடை உடுத்தி அவரை சாமியாரா ஆக்கிடறாங்க. இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் டோபிக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்... இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க. அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல என்றேன். ஞானவேல் ஒரு திறமையானவர். அவர் போல ஆட்கள் சினிமாவுக்கு தேவை” என்றார்.