சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் , தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் ரஜினி பேசுகையில், "படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள். ஆனால் யார் யார் எந்ததெந்த கேரக்டர் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வில்லன் கேரக்டர் ரொம்ப முக்கியமானது. அதில் ஒரு பெரிய ஸ்டார் நடிக்கணும். இல்லையென்றால் ஒரு புது முகம் நடிக்கணும். ஏற்கனவே நடித்தவர்கள் பண்ணால் நல்லாயிருக்காது. வட நாட்டு ஆர்ட்டிஸ்டுகள் செட்டாகாது. ஏனென்றால் லோக்கல் வில்லன்.
பின்பு நெல்சன் ஒரு பெயரைச் சொன்னார். அவர் பெரிய ஸ்டார். செம்ம டேலெண்டான நடிகர், எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் பண்ணா சூப்பரா இருக்கும். நீங்க கேளுங்க என்று என்னிடம் சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினேன். சரி, கேட்டுபாக்குறதில் என்ன தப்பு இருக்கு என முடிவெடுத்து அவரிடம் கேட்டேன். அவர், ரஜினி... நீங்க பண்ணுங்க என்று சொன்னால் நான் நடிக்கிறேன் என்றார். உடனே ஒரே குஷி. அப்புறம் 3 நாள் கழிச்சு எனக்கு ஒரே சந்தேகம். அவர் நடித்தால் நிறைய சமரசம் செய்ய வேண்டி இருக்கும். அவரை அடிக்க வேண்டி இருக்கும், அதை செய்ய முடியாது என நினைத்தேன். பின்பு நெல்சனை கூப்பிட்டு சொன்னேன், நான் என்ன நினைத்தேனோ அதைதான் அவரும் நினைச்சிருந்தார். சரி என்ன பண்ணலாம் என முடிவெடுத்து பின்பு விநாயகன் ஃபோட்டோவை காண்பித்தார். அந்த கேரக்டர் பத்தி நான் இப்போ பேசக்கூடாது. சில விஷயங்களை பேசக்கூடாது என்று நெல்சன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காரு. அதனால் படத்தில் விநாயகன் கேரக்டரை பாருங்க" என்றார்.