ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் த.செ.ஞானவேல் பேசுகையில், “இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் சூர்யாதான். அவருக்கு என்னுடைய நன்றி. தமிழ் சினிமாவில் எதாவது நல்ல படங்கள் வந்தால் அதை உடனே ரஜினிகாந்த் பாராட்டுவார். அதேபோல் ஜெய் பீம் படத்தையும் பாராட்டுவார் என்று நினைத்து, அதற்காக புது சட்டையெல்லாம் எடுத்து வைத்தேன். ஆனால் அவர் கூப்பிடவே இல்ல. கொஞ்ச நாளுக்கு பிறகு செளந்தர்யா மெசேஜ் பண்ணி ‘அப்பாவுக்கு எதாவது கதை இருந்தால் சொல்லுங்க’ என்றார். அப்படித்தான் இந்த வேட்டையன் கதை தொடங்கியது.
ரஜினிகாந்திடம் எல்லோருக்கும் பிடித்தது அவரின் ஸ்டைல்தான். அதேபோல் எனக்கும் படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் ஸ்டைல் காட்சி ரொம்ப பிடிக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படத்துக்கு கதை எழுத ஆரம்பித்தேன். ரஜினிகாந்துக்கு தெரிந்த ரசிகர்களைவிட தெரியாத ரசிகர்கள்தான் அதிகம். அதில் நானும் ஒருவன். அவர் படத்தை எல்லோரும் கொண்டாடும்போது அதில் நானும் கலந்துகொண்டு அமைதியாக ரசித்திருக்கிறேன்.
எனக்குள் இன்னும் பத்திரிக்கையாளன் இருப்பதால், எப்படி இன்னும் முதல் இடத்தில் இருக்குறீர்கள் என்று ரஜினியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அட்ஜஸ்ட், அக்காமடேட், அடாப்ட்’(Adjust, Accomodate, Adopt) இந்த மூன்றும்தான் காரணம் என்றார். படப்பிடிப்பு தளத்தில் அமித்தாப் பச்சனுக்கு முன்பு, தான் இருக்க வேண்டுமென ரஜினி என்னிடம் சொன்னார். ஆனால் அமித்தாப் பச்சன், அவருக்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பதை விரும்புவார். இருவரது இந்த அர்ப்பணிப்பு என்னை வியக்க செய்தது.
படத்திற்காக தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தையும் எடுக்க வேண்டும் அதே சமயம் மக்களுக்கு பொழுதுபோக்கு படமாகவும் இருக்க வேண்டும் என படப்பிடிப்பில் ரஜினி சொல்லுவார். அது எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. ஒருநாள் ரஜினியிடம் ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் வேட்டையன் படத்தைப்பற்றி கேட்கும்போது ‘கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம்’ என்று சொன்னார். இதை எனக்குத்தான் சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டு வேலை பார்த்தேன்” என்றார்.