ராகவா லாரன்ஸ், தற்போது 'சந்திரமுகி 2' மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் சந்திரமுகி 2 வருகிற 15 ஆம் தேதியும் ஜிகர்தண்டா 2 வருகிற தீபாவளியை முன்னிட்டும் வெளியாகவுள்ளது.
திரைப்படங்களைத் தாண்டி 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற நிறுவனத்தையும் நடத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார். கடந்த ஆண்டு "மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம்" என ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பின்பு சமீபத்தில் கஷ்டப்படுபவர்களை தானே காண்பிக்கிறேன், உதவி செய்ய ஆசை படுபவர்கள் நேரடியாக அவர்களுக்கு உதவி செய்யட்டும் என ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேரடியாக ஒரு இடத்துக்கு சென்று மக்களை சந்தித்த லாரன்ஸ், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நான் கஷ்டப்படுபவர்கள் யார் என்பதை காண்பிக்கிறேன் என முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அவர்களை சந்தித்து அவர்களை பற்றிய வீடியோக்கள் எடுத்துள்ளேன். அதை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிட்டு அவர்களின் அட்ரஸ் உள்ளிட்ட விவரங்களை பகிர்வேன். சுனாமி வரும் பொழுது எல்லாரும் ஒன்றாக சேர்ந்து உதவி செய்வோம். சுனாமி மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவு வந்தாலும் அப்படி தான்.
இவர்களுக்கு தினம் தினம் வாழ்க்கையில் ஒரு சுனாமி தான். ஒரு வீட்டில் அப்பா, அம்மா அவர்கள் இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனால் அவர்களின் குழந்தையை படிக்க வைத்துவிட வேண்டும் என ஆசை. இன்னொரு வீட்டில் இரண்டு பேரும் மாற்று திறனாளிகள், ஆனால் அவர்களுக்கும் அதே ஆசை தான். அவர்கள் எப்படி படிக்க வைப்பார்கள். என்னால் முடிந்த சிறிய உதவிகளை ஒரு வேலைக்காரன் போல பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நான் ஏற்கனவே மீடியாவில் சொல்லியிருந்தேன், என்னிடம் தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்தால் அது உதவி. தேடிப் போய் உதவி செய்வது தர்மம் என்று. இன்றைக்கு ஒரு 6 குடும்பத்தை நேரில் பார்த்து தேடி வந்து உதவி செய்திருக்கிறேன்" என்றார்.