உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 19,700 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் அதிகம் பரவாததுபோல இருந்த கரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் 649 பேர். இதுவரை 13 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் மற்றும் 43 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுரை பலர் தெரிவித்தாலும் சிலர் இதன் அவசியம் புரியாமல் வெளியேறுகின்றனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அதன் அவசியத்தை புரியவைக்கும் விதமாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இத்தாலியில் அரசு சொல்வதைக் கேட்காமல் இருந்த மக்களின் நிலைமை தற்போது பிணத்தைப் புதைக்கக் கூட இடம் இல்லாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமை நமக்கும் வந்துவிடக் கூடாது. தயவு செய்து யாரும் வெளியே போகாதீங்க,'' என்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வெளியில் சென்ற ஒருவரை லாரன்ஸ் கூப்பிட்டு,'' 20 நாள் லீவு கொடுத்திருக்கிறார்கள் அதனால் அப்பா அம்மாவை பார்க்க வீட்டிற்குச் செல்கிறேன் என்கிறாயே. இது என்ன பொங்கல் தீபாவளினு நெனச்சிட்டியா. அப்பா அம்மா கூட சந்தோசமா இருக்க போறேன்னு தானே சொன்ன.. ஆனா அவங்கள சாவடிக்க போற நீ....
நீ போய் பஸ்ல உட்காருவ. அங்க யாருக்காவது கொரோனா இருந்தால் உனக்கு தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு நீ உன் அப்பா அம்மாவைக் கட்டிப் பிடித்தால் அது அவர்களுக்கும் பரவும். அதனால நீ வீட்டுக்குப் போக வேணாம். இதெல்லாம் முடிஞ்சபிறகு எவ்ளோ வேணும்னாலும் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம். உன் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து வெளியே போகாதே” என்றார்.