உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்துவரும் நிலையில், சீரியல்களின் படப்பிடிப்புககளை எப்போது தொடங்குவது என்பது குறித்து நடிகை குஷ்பு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குஷ்புவின் ஆடியோ பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், நடிகை ராதிகாவும் தற்போது ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில்...
"காலையில் தொலைக்காட்சி தரப்பில் பேசினேன், அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம். இரண்டு மூன்று சீரியல் தயாரிப்பாளர்களிடமும் பேசி, அவர்கள் நிலை என்ன என்பது குறித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் குஷ்புவின் ஆடியோவைக் கேட்டேன். தொலைக்காட்சி நிறுவனங்கள் படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. படப்பிடிப்புக்கு செல்வதற்கு கதையை எல்லாம் தயார் செய்து, தயாராக இருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர்களிடம் பேசி உறுதி செய்துகொண்டேன். படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொன்னது அரசாங்கம்தான். சென்னையை பொறுத்தவரைக்கும் இன்னும் சிவப்பு மண்டலத்தில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது.
ஹாட் ஸ்பாட் என்றால் ஆள் நடமாட்டமே பண்ண முடியாத ஒரு நிலைமையில் இருக்கிறோம். ஆகையால், படப்பிடிப்பு தொடர்பாக யோசிக்க முடியாது. இதெல்லாம் மாறியவுடன் எப்படி போகப்போகிறோம் என்பதற்கு குஷ்புவும் சில யோசனைகள் சொல்லியிருக்கிறார். அனைத்து தயாரிப்பாளர்களும் கலந்து பேசி எப்படியெல்லாம் செயல்பட முடியும் என்று பார்க்க வேண்டும். செல்வமணிக்கும் ஒரு ஆடியோ போட்டு சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு தருணத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குத் தகுந்தாற் போல்தான் நாமும் வேலை செய்ய முடியும். அதை மனதில் வைத்துச் செயல்படுவோம். எப்படி திட்டமிட்டுப் பணிபுரியலாம் என்பதை பார்க்க வேண்டும்'' என கூறியுள்ளார்.