Skip to main content

''தனிமைபடுத்துவதில் ஒன்றும் தவறில்லையே..!'' - ராதாரவி விளக்கம் 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
gds

 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையில் பாதிப்பு பல மடங்காக உயர்ந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கினால் சிக்கிக் கொண்டவர்கள் இ-பாஸ் விண்ணப்பித்து சொந்த ஊருக்கு திரும்பலாம் என்று தமிழக அரசு ஏற்பாடு செய்தது.


இதையடுத்து சில பிரபலங்களும் சென்னையை விட்டு, தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அண்மையில் இயக்குனர் பாரதிராஜா தேனிக்கு சென்று, பின்னர் தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்ட விஷயம் சர்சையானது. அதன்பின் அவர் அதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார். அதேபோல் நடிகர் ராதாரவிக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனிமைபடுத்தப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனையடுத்து, ஓய்வெடுப்பதற்காக, கோத்தகிரிக்கு சென்று தனிமையில் ஓய்வெடுத்து வருவதாக சமீபத்தில் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார் ராதாரவி. இந்நிலையில் தொடர்ச்சியாக திரையுலகினர் பலரும் நலம் விசாரித்துக் கொண்டே இருந்ததால் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராதாரவி. அதில்...

 

 


"என்னை பற்றி தவறான செய்தி ஒன்று வெளியானதால் பலரும் தொலைபேசியிலும், மெசேஜிலும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். தனிமைப்படுத்தப்பட்டார் என்கிறார்கள். இந்த நேரத்தில் அனைவரையுமே தனிமைப்படுத்திதான் ஆக வேண்டும். வேறு மாவட்டத்திலிருந்து, இந்த மாவட்டத்துக்கு வந்தால் தனிமைப்படுத்துவார்கள். அதில் ஒன்றுமே தவறில்லை. கார் பாஸ் கொடுக்கும் போதே, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே வரமுடியும். இங்கு வீடு இருப்பதால் இங்கு வந்து தங்கியிருக்கிறேன். 14 நாட்கள் வீட்டிற்குள்தான் இருப்பேன். மாநகராட்சியிலிருந்து நோட்டீஸ் ஒட்டுவார்கள். ஒட்டட்டும் அதில் தவறில்லை. கோத்தகிரியில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இங்கு எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் பெரிய செய்தியாகிவிட்டது. அரசாங்கம் எப்போது படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்கிறதோ, அப்போது சென்னைக்கு மீண்டும் வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்