Skip to main content

மறைந்த எம்.பி. வசந்தகுமாருக்கு ராதாரவி இரங்கல்!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
radharavi

 

 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. வசந்தகுமார் (காங்கிரஸ்) கரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தார் இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அவரை கரோனா தொற்று தாக்கி அதிலிருந்து மீண்டு கொண்டிருந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் நேற்று (28-ம் தேதி) மாலை இறந்தார். அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட அரசியல் பிரபலங்கள், திரைப்பட துறையினர், வா்த்தக அதிபா்கள் என பல தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் நடிகர் ராதாரவி எம்.பி. வசந்தகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்தளவுக்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும் கூட, அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.

 

தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படி காண்பேன்.

 

பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலுங்கான மாநில ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய்வசந்த், வினோத், மகள் தங்கமலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்