சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சிறப்பு காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறப்பு காட்சியின் போது திரையரங்கிற்கு சென்ற அல்லு அர்ஜூனின், சிசிடிவி காட்சிகள் ஹைதராபாத் போலீசாரால் வெளியிடப்பட்டது. மேலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவர் திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது, பெண் இறந்த விஷயத்தை தெரிவித்தும் வெளியே செல்ல மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ, சிகிச்சையில் இருக்கும் அவரது மகனைக் குறித்தோ அல்லு அர்ஜூனை ஆதரிப்பவர்கள் கவலைப்பட்டார்களா? என கடுமையாக அல்லு அர்ஜூனை விமர்சித்தார். இதை மறுத்து செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், “அனுமதியின்றி திரையரங்குக்கு சென்றேன் என்பது தவறான தகவல். என்று விளக்கமளித்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு படக்குழு சார்பில் ரூ.50லட்சம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அம்மாநில அமைச்சர், சீதாக்கா, “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்திய, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலீஸ்காரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சினிமா மூலம் தெரிவிக்கப்படும் செய்திகள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்” என நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, அல்லு அர்ஜுன் தரப்பில் ஒரு கோடி ரூபாய், இயக்குநர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாய், தயாரிப்பாளர்கள் தரப்பில் 50 லட்ச ரூபாய் என மொத்தம் இரண்டு கோடி ரூபாய் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை அவரின் தந்தை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பின்பு அது குறித்து கூறுகையில், சிறுவனின் உடல்நலம் தேறியுள்ளதாகவும் நினைவும் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.