உத்தரப் பிரதேசம், அயோத்தியில் கடந்த் 22ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 23ஆம் தேதி, புனே திரைப்படக் கல்லூரியில் ‘பாபர் மசூதி இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது’ என்ற வாசகம் அடங்கிய பேனர், மாணவர்கள் வைத்திருந்தனர். அப்போது, வலது சாரி அமைப்பை சார்ந்தவர்கள், பாதுகாவலரை தாக்கி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து பேனரை கிழித்து மாணவர்களை தாக்கினர். மேலும் ‘ஜெய் ஸ்ரீராம்...’ என முழக்கமிட்டபடி பேனரை தீயிட்டு எரித்தனர்.
இத்தகவல் அறிந்த புனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. பின்பு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, டெக்கான் காவல் நிலையத்தில் வலது சாரி அமைப்பைச் சார்ந்த ஒருவராலும், நிர்வாகத்தின் சார்பாக கல்லூரியின் பாதுகாவலராலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.