கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குபின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், நேற்று கரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளா முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர் நிவரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் வேலையில்லாமல் கஷ்டப்படும் ஃபெப்சியின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது தவிர, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக ரசிகர் மன்றங்களுக்கு கணிசமான ஒரு தொகையையும் நிதியுதவியாக அளித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்துள்ள விஜயை அம்மாநில முதல்வர் நாராயணசாமி பாராட்டியுள்ளார். அதில், “புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் இருக்கிறது. எனவே பல நடிகர்களும் தங்கள் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்துகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை நம் அரசு செய்கின்றது. இதனை மறக்காத விஜய் நமக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. அந்தப் பணத்தை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மற்ற நடிகர்களும் அவரை போல் முன்வந்து புதுச்சேரிக்கு உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.