'ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' சார்பாக மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
தயாரிப்பாளர் தேனப்பன் பேசுகையில், "வெளிப்படையாக சொல்கிறேன். பகாசூரன் படம் பா.ரஞ்சித்திற்கு போட்டியான படம் தான். அதில் சந்தேகமே இல்லை. பா.ரஞ்சித்திற்கு கிடைக்கிற வரவேற்பு மோகன்.ஜிக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம். மோகன்.ஜி இப்படம் மூலம் தன்னை நிரூபிப்பார். ரிலீசுக்கு பிறகு அடுத்த கட்டத்துக்கு செல்வார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை மிரட்டி எல்லாம் வாங்கவில்லை. வெளிப்படையாக சொல்கிறேன் அந்த நிறுவனம் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பலரும் அந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை இழுத்து மூடுகிற அளவுக்கு திசை திருப்புகிறார்கள்.
அவர்கள் வெளியிட்ட படங்களில் வசூல் விவரம் வெளியில் தெரிகிறது. முன்பு வெளியான படங்களில் வசூல் வெளியில் தெரிவதில்லை. அதற்கு காரணம் தவறானவர்கள் படத்தை வெளியிடுவது தான். அவர்கள் கையில் போனால் அவ்வளவுதான். தமிழகத்தில் இருக்கிற அனைத்து விநியோகஸ்தர்களும் மாஃபியா கும்பல்கள். அதனால் தரமான படங்கள் எடுத்தால் நிச்சயம் வெற்றிபெறும்" என்றார்.