இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதனிடையே, ‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி, படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு வழக்கா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது... கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா??? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா” எனக் குறிப்பிட்டுள்ளார்.