அண்மையில் இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமலின் கன்னிராசி படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து கூறுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தில் 1,351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை. இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
பாரதிராஜா சில தயாரிப்பாளர்களை சேர்த்து கொண்டு புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில் தாணு அவர்கள் பேசும் போது, ‘பாரதிராஜா மீண்டும் சங்கத்தில் வாருங்கள். உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம்’ என்று கூறினார்.
யாரிடமும் எந்த கருத்தும் கேட்காமல் தாணு அவர்கள் அவரது சொந்த கருத்தை கூறினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். தேர்தலில் களமிறங்க இருக்கிறோம்" என்றார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.