இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூல் ஆகியிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தில் வசூலான ரூ.65.5 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், இப்படம் உலகம் முழுவதும் ரூ.191.5 கோடி வசூல் சாதனைப் படைத்தாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி நேற்றோடு நான்கு நாள் வசூல் நிலவரப்படி மொத்தம் ரூ.18.5 கோடி வசூல் ஆகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி நான்கு நாள் வசூல் நிலவரத்தை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில், இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளது.
𝟓𝟎𝟎 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 🔥🔥🔥🔥#Kalki2898AD #EpicBlockbusterKalki— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 30, 2024