
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(10.04.2025) வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் 28.50 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த மலையாள இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவர் அஜித்துடன் நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நான் உங்களை பற்றி எவ்வளவு எழுதினாலும் அது போதுமானதாக இருக்காது சார். உங்கள் மீது எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. படப்பிடிப்பில் உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் நடிகர்களுக்கு பெரிய ஊக்கம் அளித்தது. அதை இனி வரும் காலங்களில் நான் பின்பற்றுவேன். உங்கள் மென்மையும் அரவணைப்பும் என்னை இன்னும் வியக்க வைக்கிறது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் போனாலும் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் உங்களுடன் நடித்த அனுபவத்தை என்றென்றும் போற்றுவேன். உங்களின் தீவிர ரசிகை” எனக் குறிப்பிட்டுள்ளார்.