மூன்றாம் சீசன் பிக்பாஸை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் கமல்ஹாசன். தற்போது மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த வருடத்துடன் சினிமாத்துறைக்கு கமல் வந்து அறுபது வருடங்களாகிவிட்டன.
களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தின் மூலம் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்பின் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர், அடுத்து டான்ஸ் மாஸ்டர் என்று பணியை மேற்கொண்டு வந்தார். கடந்த 1973ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்னும் படத்தில் கமல்ஹாசனுக்கு முக்கியவேடம் ஒன்றை கொடுத்து நடிக்க வைத்தார் கே.பாலசந்தர். அதன்பின் தமிழ் சினிமாவில் நாயகனாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல் சினிமா துறைக்கு வந்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இதை பலரும் கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக கமலின் ரசிகர்கள் கமலை பற்றி மற்ற சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு தொகுப்பாக யூ-ட்யூபில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர்“கமல் சாரின் இந்த 60வது ஆண்டு சினிமா பயணத்தில் நான் அவரை பற்றி பேசுவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருத்தர் தன்னுடைய வாழ்வில் 99 சதவீதத்தை கலைக்காக அற்பணித்திருக்கிறார். அற்பணிப்பு என்பதைவிட மிகவும் மகிழ்ச்சியாகதான் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இது அவருடைய பல்வேறு பரிணாமங்களில் நமக்கு தெரியவரும். இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நடிகர், நடிகை என்று அவர் என்னதான் பண்ணவில்லை. இந்த சினிமாத்துறையில் அவர் முக்கால்வாசி நிறைய இடங்களை தொட்டுவிட்டார்.
ஒருமுறை அவர் சொல்லியிருக்கிறார். தற்போது நீங்கள் பார்க்கும் கமல், முன்பைவிட மெருகு ஏத்தியவன் என்று. இப்படி அடுத்து வரக்கூடிய நடிகர்களுக்கும் அவர் அமைத்துள்ள பெஞ்ச் மார்க் அமேசிங்கானது. அதை ரீச் செய்ய நினைக்கும் தற்போதைய நடிகர்களுக்கு எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. அவருடைய சினிமா வாழ்க்கையாக இருக்கட்டும், அரசியல் வாழ்க்கையாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அடுத்தடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். அவர் எந்தவித கால கட்டத்திலும் ஒரு ட்ரெண்டை செட் செய்பவராகவே இருப்பார்” என்று கூறினார்.