ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து முடித்தபின் தற்போது தலைவர் 168 என்று அழைக்கப்படும் படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த வருட தொடக்கத்தில் மலையாள சினிமாவின் பிளாக்பஸ்டர் படம் என்றால் பிருத்வி ராஜ், மோகன் லாலை வைத்து இயக்கிய லூசிஃபர் படம்தான். சுமார் 200 கோடி வரை வசூலை ஈட்டியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட இறுதியில் தொடங்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் லூசிஃபர் படம் எடுத்து முடித்தவுடன் தனக்கு ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதை தவறவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
‘டிரைவிங் லைசன்ஸ்’ என்னும் படத்தின் புரொமோஷனில் பேசிய பிருத்விராஜ் , “லூசிஃபர் படத்தை முடிக்கும் தருவாயில் எனக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் 'ஆடுஜீவிதம்' படத்தில் நான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்ததால் என்னால் அதை இயக்க முடியவில்லை. பின் ரஜினி அவர்களுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அனுப்பினேன். என் வாழ்வில் யாரிடமும் நான் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டதில் வருத்தம்” என்றார்.