கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி வந்து நிவாரணம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து பிரசாந்த், தற்போது மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்ததை பண்ணியிருக்கேன். அரசு அதிகாரிகள்...மழையை கூட பொருட்படுத்தாமல் நிறைய உதவிகள் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். குளங்களை தூர்வார வேண்டும். பண்ணிக்கிட்டு இருக்காங்க, ஆனால் அது எவ்ளோ பண்ணினாலும் பத்தாது. ஏனென்றால், நம் நாடு பெரிய நாடல்லவா. இருந்தாலும் கண்டிப்பாக தூர்வாருவார்கள்.
ஒவ்வொரு தடவையும் ஏதாவது நடக்கும் போது தான் ஏதோ ஒன்னு கத்துப்போம். எல்லாருக்கும் எல்லாமே தெரியாது. அடுத்த தடவை இது மாதிரி நடக்காமல் இருக்க அதை நிச்சயம் பண்ணுவார்கள்” என்றார்.