பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனிடையே நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று நடந்து முடிந்த கேரளா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அதில் அவர் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அதன் ஒரு பகுதியில், “நம்மைச் சுற்றி என்ன வகையான கதைகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய 6 இளைஞர்களைச் சுற்றி இப்போது ஒரு கதை கட்டமைக்கப்படுகிறது. ஒரு இளைஞரின் புகைப்படத்துடன் எதிர்க்கட்சி சிக்கியுள்ளது என ஆளுங்கட்சி சொல்லும் கதை. ஆளுங்கட்சியை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியின் கதை.
இது இல்லாமல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து மற்றொரு கதை. ஏன் அந்த இளைஞர்களை இதைச் செய்ய தூண்டியது எது என்ற கதை கூட வரலாம். அதே சமயம் வேலையின்மையால் நாட்டின் இளைஞர்கள் எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளனர் என்பதை விவாதிக்கும் ஒரு கதை இருக்குமா. மணிப்பூர் தொடர்பாக பதில் கிடைக்காமல் இருப்பது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்பதற்கான உரையாடலும் இருக்குமா” என கேள்விகளை எழுப்பினார்.
கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி பெரும் பரப்பரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.