தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து, சிறந்த நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவை எதிர்த்து, கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். அண்மையில் பாஜக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் பவன் கல்யாணையும் விமர்சித்திருந்தார். இதற்கு பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.
அதில், “அரசியலில் முடிவுகள் பல முறை மாறும். அதன் நோக்கமே பல நாட்களுக்கு மக்களுக்குச் சேவை செய்வதும், கட்சியின் நலன் காப்பதுமே ஆகும். ஜி.ஹெச்.எம்.சி. தேர்தலில் எங்கள் தலைவர் பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும் என நம்புகிறேன். பிரகாஷ்ராஜின் அரசியல் அறிவை பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி புரிந்துகொண்டு விட்டார். அந்த விவாதத்தில் பிரகாஷ்ராஜின் நாக்கு கட்டுண்டதைப் போல இருந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. உங்கள் பார்வையில் பாஜகவின் முடிவுகள் சரியில்லை என்றால் அதை விமர்சிப்பது சரியே.
ஆனால் நல்ல விஷயங்களைப் பாராட்டக்கூடாது என்கிற உங்கள் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்ல? ஜனசேனா கட்சியுடன் இந்த மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய பாஜகவால் முடியும். உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள் எவ்வளவு பேர் முயன்றாலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது. பாஜக தலைவர்களை நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். ஜனநாயகத்துக்கு இந்த கட்சி என்ன மதிப்பு தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு சித்திரவதை தந்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்துக்காக அவர்களை அல்லல் பட வைத்து, தேதிகள் கொடுத்து அதை ரத்து செய்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். முதலில் பவன் கல்யாணைப் பற்றிப் பேசுவதற்கு முன் நாம் இருவரும் பேசுவோம்" என்று பதிவிட்டார்.
இந்நிலையில், நாக பாபுவின் விமர்சனத்திற்கு கிண்டலாக பதிலளித்துள்ளார். அதில், “மதிப்பிற்குரிய நாகபாபு, உங்கள் இளைய சகோதரர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு எனக்குப் புரிகிறது. என் தேசத்தின் மீது எனக்கிருக்கும் அன்பு உங்களுக்குப் புரிகிறது. என்னால் தெலுங்கு பேச முடியும். ஆனால், உங்கள் 'மொழி'யில் பேச முடியாது” என்று தெரிவித்துள்ளார்.