
தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் நடிகர்கள் ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரக்கொண்டா, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட 25 நபர்கள் மீது சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதற்காக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா என்பவர் புகார் கொடுத்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசி விளக்கமளித்துள்ளார். அவர் பேசுகையில், “2016இல் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதில் நடித்தது சரி கிடையாது என்பதை உணர்ந்தேன். பின்பு நான் நடித்துவிட்டதால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என விட்டுவிட்டேன். அது ஒரு வருட ஒப்பந்தம். அவர்கள் அதைப் புதுப்பிக்க என்னிடம் மீண்டும் கேட்ட போது நான் நடிக்க முடியாது என சொல்லிவிட்டேன். அதில் நடிக்க என் மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. இது 8-9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு நான் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எந்த விளம்பரங்களிலும் நடிக்கவில்லை. 2021ல் வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கி மீண்டும் எனது வீடியோக்களுடன் விளம்பரம் செய்தனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன்” என்றார்.
மேலும், “இளைஞர்கள் சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்து தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு காவல்துறையினரிடமிருந்து எந்த நோட்டிஸும் வரவில்லை, அப்படி ஏதாவது வந்தால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்” என்றுள்ளார். அதே போல் ராணா டகுபதியும் சூதாட்ட செயலி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார்.