தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் ஷாருக்கானின் 'பதான்' படம் குறித்து பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு சர்வதேச விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், "பதான் படத்தை தடை செய்ய விரும்பினார்கள். அது தற்போது ரூ. 700 கோடி வசூல் செய்துள்ளது. இந்த முட்டாள்களால் மோடியின் பயோபிக் படத்தை 30 கோடிக்கு கூட ஓட வைக்க முடியவில்லை. அவர்கள் குரைக்க மட்டும் தான் செய்வார்கள். கடிக்க மாட்டார்கள்" என்றார்.
மேலும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். "தி காஷ்மீர் ஃபைல்ஸ் முட்டாள்தனமான படங்களில் ஒன்று, ஆனால் அதை தயாரித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது. படத்தை பார்த்த சர்வதேச ஜூரி அவர்கள் மூஞ்சில் காரி துப்புவது போல் விமர்சித்தார்.
இந்த சூழலில் அப்படத்தின் இயக்குநர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என கேள்வி கேட்கிறார். நான் சொல்கிறேன், ஆஸ்கர் இல்லை ஒரு பாஸ்கர் விருது கூட கிடைக்காது. இது போன்ற ஒரு பிரச்சார நெடியுள்ள படங்களைத் தயாரிக்க அவர்கள் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது." என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.