
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. கதாநாயகனாக ‘சிங்காநல்லூர் சிக்னல்’ , ‘வுல்ஃப்’ உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே நடன இயக்குநராக தெலுங்கு படமான ‘கண்ணப்பா’ படத்தில் பணியாற்றியுள்ளார். இந்தப் படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது. ஆனால் வி.எஃப்.எக்ஸ் முடியாதது காரணங்களால் தள்ளி போனது.
இந்த நிலையில் ‘கண்ணப்பா’ படக்குழுவினர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து படத்தின் புது ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர். ஜூன் 27ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த சந்திப்பில் படக்குழுவினருடன் பிரபு தேவாவும் இருந்தார். அவர் யோகி ஆதித்யநாத்துக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்தார். மேலும் அவரை சந்தித்தது மகிழ்ச்சி எனவும் அவரது விருந்தோம்பலுக்கும் வரவேற்புக்கும் நன்றி என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் போது “கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்” என்று ரகு பாபு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படம் சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படக்குழுவினர் இப்படத்தின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
It was our pleasure meeting Hon’ble Chief Minister Shri Yogi Adityanath Ji
Thank You for your hospitality and welcome 🙏 https://t.co/8akTCN3g4L— Prabhudheva (@PDdancing) April 9, 2025