மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய் சிறப்புறச் செயல்பட வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட பதிவில், "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட பதிவில், "தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்கிற பெருமதிப்பிற்குரிய ஐயா இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட செய்தியறிந்து மகிழ்வுற்றேன். ஐயா இளையராஜா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது மாநிலங்களவைச் செயல்பாடுகள் சிறக்க வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.