சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தேங் காட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதனையொட்டி படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரைலரை பார்க்கையில் கதாநாயகன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கிறார். பின்பு அங்கு நடக்கும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அந்த சொர்க்கத்தில் அஜய் தேவ்கன் சித்திர குப்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல் பார்க்கமுடிகிறது. மேலும் ட்ரைலரின் கடைசியில் அஜய் தேவ்கன் நகைச்சுவை சொல்கிறேன் என்று சொல்லி ஒரு வசனம் பேசுகிறார். அந்த வசனம் தொடர்பாக உ.பி மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அஜய் தேவ்கன் பேசும் வசனத்தில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்நிலையில் தேங் காட் படத்திற்கு எதிராக ராஜஸ்தானில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சித்திரகுப்தனின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படும் காயஸ்தர் சமூகத்தினர் தேங் காட் படத்திற்கு எதிராக நக்கலஞ்ச்சு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சித்திரகுப்தனுக்கு கோட் சூட் அணிவித்து, அவரின் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் பெண் நிற்கும் காட்சி மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்றும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.