விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் பேரரசு, "ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே எங்களுக்கு மத வெறியர்கள் என்று பச்சைகுத்துவது. வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிருஸ்துவரா இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா சொல்கிறார்கள். அதே போலத்தான் எல்லாத்திலும் மாற்றம் வேண்டும். இந்து மாதம் ஒரு காலத்தில், சைவம், வைணவம் என பல மதங்களாக இந்திய மதம் சிதறியிருந்தது. அதை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஆங்கிலேயர் இந்து மதம் என்று ஒரு பெயரை வைத்தார்கள். சாமி கும்பிடுகிறவர்கள் அனைவரும் எல்லா சாமியையும் வழிபடுகிறார்கள். உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை. நீங்கள் இந்துக்கள் இல்லைல, அப்புறம் எதற்கு இந்துக்கள் பற்றி பேசுறீங்க. சாமி கும்புடுறவங்க இதை பற்றி பேசட்டும். நாத்திகம் பேசுறவன் இந்துவை பற்றி பேசக்கூடாது. நாத்திகம் பேசுறவன் முதலில் மனிதனே இல்லை, எவரொருவர் மற்ற மதத்தை இழிவாக பேசுகிறாரே அவர் மனிதரே இல்லை" என தெரிவித்துள்ளார்.